Tuesday, November 25, 2014

பலவிதமான ஆபத்துக்களால் சூழப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குளம் போல் தேங்கியுள்ள மழைநீர், வெட்டி குவிக்கப்பட்டுள்ள பனை மரங்களால், மாணவர்களை அச்சுறுத்தும் விஷ ஜந்துக்கள் என, அரசு தொடக்கப் பள்ளியை சூழந்துள்ள ஆபத்துகளை அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, கிராமவாசிகள கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே, சாலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 52 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளியின் முன்பக்கம், மூன்று அடி ஆழத்திற்கு குளம்போல் மழைநீர் தேங்கியிருப்பதால், அதன் அருகே ஓடி விளையாடும் மாணவர்கள், தவறி விழும் ஆபத்தான நிலையில் உள்ளனர். பள்ளியின் பின்புறம் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது, துாண்களில் உள்ளிருக்கும் கம்பிகள் தெரிகின்றன. எந்த நேரத்திலும், இடிந்து விழக்கூடிய ஆபத்தான சூழலில், பள்ளி மாணவர்கள் உள்ளனர்.
நீர்த்தேக்கத் தொட்டி அருகே, பனை மரங்களை வெட்டி, மலைபோல் குவிக்கப்பட்டிருப்பதால், அதில் ஏராளமான விஷ ஜந்துக்கள் தஞ்சம் புகுந்துள்ளன. இதனால் பள்ளி வளாகத்திற்குள் பாம்பு, தேள் உள்ளிட்டவை வருவதால், பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேற்கண்ட ஆபத்தான சூழலில், அப்பள்ளி மாணவர்கள் பயின்று வருவதால், மாணவர்களின் பெற்றோர் சங்கடத்தில் உள்ளனர். பள்ளியை சூழ்ந்துள்ள ஆபத்துகளை அகற்றி, சுற்றுச்சுவர் எழுப்பி, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என, சாலை கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment