Monday, November 10, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 10ம் தேதி (இன்று) கடைசி நாளாகும்.
வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் அக்டோபர் 15-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 26-ம் தேதி மற்றும் நவம்பர் 2-ம் தேதி இதற்கான சிறப்பு முகாம்கள் 890 மையங்களில் நடத்தப்பட்டன.
சென்னை மாநகராட்சியின் 4,5,6,8,9,10,13 ஆகிய மண்டலங்களில் வசிப்பவர்களின் வாக்காளர் பட்டியல் மண்டல அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள தங்களது மண்டல அலுவலகத்தையோ, அருகில் உள்ள வாக்குச்சாவடி மையத்தையோ வாக்காளர்கள் விண்ணப்பங்களுக்கு அணுகலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள், மற்றும் 01.01.2015 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ( 01.01.1997 ஆம் தேதிக்கு முன்பிறந்தவர்கள்) படிவம் 6 ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-A வை பூர்த்தி செய்தும் அதற்கான ஆவணங்களை இணைத்தும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.
அதோடு, சென்னை மாவட்டத்தில் 40 பிரவுசிங் மையங்களுடன் வாக்காளர் பதிவு சேவைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு விண்ணப்பங்களை பதிவு செய்ய ரூ.10, அச்சு செய்ய ரூ.3, விவரங்களை தேட ரூ.2 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற மையங்களில் இந்த கட்டணத்துக்கு உட்படாமல், இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment