Sunday, November 2, 2014

மண்டல அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அசத்தல்

மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில், மாணவ, மாணவியர் பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தி, பார்வையாளர்களின் பாராட்டை பெற்றனர்.

அவிநாசி மண்டலத்துக்கு உட்பட்ட அவிநாசி மற்றும் ஊத்துக்குளி வட்டாரங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி மற்றும் பெருவிழா, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மொத்தம் 24 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று, தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
புவி வெப்பமயமாதல், கடல் எல்லை குறியீடு கண்டறிதல், நியூட்டனின் விதிகள், மனிதனும் இயற்கையும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் வில்லியம் சார்லஸ், கன்னியப்பன், சரத்குமார் ஆகியோரை கொண்ட நடுவர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
6 - 8ம் வகுப்பு வரையுள்ள பிரிவில், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், சரவணபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 9-10ம் வகுப்பு வரையிலான பிரிவில் ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம், அருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றன. பிளஸ் 1 - பிளஸ் 2 பிரிவில், ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
ஆசிரியர்களுக்கான பிரிவில், பார்வையற்றவர்களுக்கான எலக்ட்ரானிக் கைத்தடியை உருவாக்கிய பெரியாயிபாளையம் பள்ளிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மண்டல அளவில் முதலிரண்டு இடத்தை பெற்ற அணிகள், அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளன.

No comments:

Post a Comment