Sunday, November 23, 2014

வசதிகள் ஏதுமின்றியும் தொடர்ந்து சாதிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட செயற்கை ஓடுகளம், செயற்கை புல்வெளி, கால்பந்து, ஹாக்கி மைதானங்கள், கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் உள்ளரங்குகள் இருந்தால்தான் விளையாட்டு கனவு நனவாகுமா? சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் அடிப்படை வசதி எதுவுமின்றி பதக்கங்களை வெல்லலாம் என்பதை நிரூபித்து வருகின்றனர் அரசுப் பள்ளி மாணவர்கள்.

மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ளது பி.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி. 11 ஏக்கர் பரப்பளவில் 3 ஏக்கரில் வகுப்பறை கட்டடங்கள்; 613 மாணவர்களுடன் செயல்படுகிறது. வகுப்பறை கட்டடத்தைத் தாண்டி மீதியிடம் மைதானமாக வெற்றிடமாக இருக்கிறது. அதனாலென்ன? குத்துச்சண்டையும், டேக்வாண்டோவும், தடகளமுமாக வெற்றிகளை தக்கவைத்து வருகின்றனர் மாணவர்கள்.
தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தி வரும் தேசிய குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து மூன்றாண்டுகளாக தங்கப் பதக்கத்தை தக்க வைக்கும் மாணவி முத்துலட்சுமி, அடுத்து பதக்க கனவுக்காக போராடி வரும் மோனிஷா... கிராமத்திலிருந்து அதிகாலையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு பயிற்சிக்காக துவங்குகிறது இவர்களின் பயணம்.
கடந்தாண்டு உசிலை கல்வி மாவட்ட ஏ பிரிவு பள்ளிகளுக்கான போட்டிகளில் இப்பள்ளி முதலிடம் பெற்றது. மாவட்ட டேக்வாண்டோ திறந்தவெளி போட்டிகளில் 29 மாணவர்களை களமிறக்கியதில் 26 பேர் பதக்கங்களை வென்றனர். இதில் 6 தங்க பதக்கங்கள். கடந்தாண்டு நடந்த மாநில டேக்வாண்டோ போட்டியில் பவித்ரா வெண்கலம் வென்றார்.
சிலம்பத்தில் 40 பேர் பயிற்சி பெறுகின்றனர். தடகளத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் 67 பேர் பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி என்றால் பள்ளியைச் சுற்றியுள்ள வயல்வெளியில் வெறும் கால்களில் பயிற்சி பெறுவதுதான். கபடி மற்றும் ஹேண்ட்பால் என அணியாக விளையாடும் போட்டிகளிலும் பதக்கம் பெற்றுள்ளனர்.
கடந்த வாரம் நடந்த மண்டல பள்ளிகளுக்கான 14 வயது பிரிவு தடகளப் போட்டிகளில் மாணவி சுகப்ரியா 400 மீட்டர், 600 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய மூன்றிலும் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். அப்படியே மாநிலப் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஜூடோ போட்டியில் மாணவர்கள் பிரிவில் மூன்று தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலம், மாணவிகள் பிரிவில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றனர்; டேக்வாண்டோ போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றனர்.
எப்படி சாதிக்க முடிந்தது?
உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகர் பேசுகிறார்... ஏழாண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிகிறேன். மற்ற விளையாட்டுகளை விட புதிய விளையாட்டுகளை மாணவர்கள் எளிதாக கற்றுக் கொள்கின்றனர். செலவும் குறைவு. ஆனால் டேக்வாண்டோ, ஜூடோ, சிலம்பப் போட்டிகளில் பங்கேற்பதற்கு சீருடை, கவசம் ஆகியவற்றுக்குத்தான் ஆயிரக்கணக்கில் செலவாகிறது. அதனால் அதிகபட்சம் இரண்டு உடைகள் வாங்கி, மாணவர்களுக்கு மாற்றி மாற்றி அணிவித்து போட்டிகளுக்கு அனுப்புகிறோம்.
எந்த விளையாட்டுக்கும் எங்கள் மாணவர்களுக்கு தனி பயிற்சியாளர் இல்லை. ஏனென்றால் பணம் கொடுத்து கற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் வசதியானவர்கள் இல்லை. கிராமப்புறத்தில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் மாணவர்களின் கவனம் வேறு திசைக்கு மாறாமல் பாதுகாக்க முடிகிறது.
தலைமையாசிரியர் குமரேசன்: கிராமப்புற பெற்றோருக்கு விளையாட்டின் அருமை புரிவதில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் விளையாடுவதை பிரச்னையாக பார்க்கின்றனர். குத்துச்சண்டை, ஜூடோ, தடகளப் போட்டிகளில் அடிபட்டால் வாழ்க்கை போய்விடும் என பயப்படுகின்றனர்.
மாணவி சுகப்ரியா மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றும், பெற்றோர் அனுப்ப மறுத்தனர். மாநிலப் போட்டியில் பங்கேற்கும் சான்றிதழ் மூலம் கிடைக்கும் நன்மைகளை சொன்னபிறகே சம்மதித்தனர். விளையாட்டின் மூலம் எங்கள் பிள்ளைகள் பல்வேறு வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை என்றார்.

No comments:

Post a Comment