Sunday, November 23, 2014

விடலை பருவத்தினருக்கு அறிவியல் கலந்த உண்மைகளை கூற ஆசிரியர்களுக்கு அறிவுரை

விடலை பருவத்தினருக்கு அறிவியல் கலந்த உண்மைகளை கூறுமாறு ஆசிரியர்களுக்கு மனநல சிறப்பு டாக்டர் பாபு அறிவுரை வழங்கினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில், மாவட்ட பள்ளி கல்வி துறை, செல்லமுத்து அறக்கட்டளை, சத்தியசாயி சேவா சமிதி சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கான, "மாணவர் மனநலம் காப்போம்" என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அவர் பேசியதாவது: மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளது.

மாணவ, மாணவியருக்கு விடலைப் பருவம் சவாலானது. மனநோயாளிகள் பிறப்பது இல்லை உருவாக்கப்படுகிறார்கள். விடலை பருவத்தினருக்கு வரும் பலதரப்பட்ட விஷயங்களை கேட்கக்கூடியவர்களாக ஆசிரியர்கள் இருங்கள். அதில் அறிவியல் கலந்த உண்மைகளை கூறுங்கள். வீட்டில் பெற்றோர் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்காவிட்டால் தவறானவர்களிடம் சிக்கி விடுவார்கள்.
ஆசிரியர்களை பயமுறுத்தும் பூதங்களாக சித்தரித்து விட்டோம். இனி நீங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக நிற்க வேண்டும். 2020 ல் மற்ற நோய்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, மனநோய் 2வது இடத்திற்கு வரப்போகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. சிகரெட், பாக்கு, கஞ்சா என்ற போதை பொருட்களை அடுத்து சில மாணவர்கள் ஒயிட்னர் பயன்படுத்துகின்றனர்.
சிலர் கை குட்டை, இன்ஹெலரில் வைத்து பயன்படுத்துகின்றனர். அடிக்கடி நெயில் பாலீஸ் மாற்றக்கூடியவர்களையும் கண்காணிக்க வேண்டும். இதையும் ஒருவகை போதையாக பயன்படுத்துகின்றனர். அடிக்கடி அதிக நேரம் கழிப்பறையில் நேரத்தை செலவிடுகிறார்கள் என்றாலோ, கழிப்பறையில் வித்தியாசமான வாசனை வந்தாலோ கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மனநல பிரச்னைகளையும் ஆரம்பத்திலே கண்டுபிடித்து விட்டால் தடுத்து விடலாம், என்றார்.

No comments:

Post a Comment