Wednesday, November 5, 2014

பல்வேறு காரணங்களால் விளையாட்டில் பின்தங்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்

நிதி ஒதுக்கீடு குறைவு, விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் பின்தங்குகின்றனர்; விளையாட்டில் ஆர்வம் இருந்தும் தனியார் பள்ளிகளுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

தமிழக அரசு, விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பள்ளி கல்வித்துறையும், விளையாட்டில் மாணவர்களின் திறமையை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், குறுமைய போட்டி நடத்தி வருகிறது. வட்டார, மாவட்ட அளவில் குறுமைய போட்டிகளில் தனியார் பள்ளிகளுக்கு சளைக்காமல் அரசு பள்ளிகளும் பங்கேற்று சாதிக்கின்றன. எனினும், பிரதான தகுதிச்சுற்று போட்டிகளில், தனியார் பள்ளிகளிடம், அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி வாய்ப்பை பறிகொடுக்கின்றனர்.
தகுதியும் திறமையும் இருந்தும், போதிய விளையாட்டு உபகரணங்களோ, உரிய பயிற்சியோ இல்லாததால் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடுவதாக, அரசு பள்ளி மாணவ, மாணவியர் கவலை தெரிவிக்கின்றனர். மாவட்ட அளவில், பல அரசு பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் பெயரவுக்கு மட்டுமே உள்ளன; உடைந்தோ, பயன்படுத்த முடியாத நிலையில் அவை இருக்கின்றன. அதையும் மீறி மாணவர்களின் அக்கறை, உடற்கல்வி ஆசிரியர்களின் ஒத்துழைப்பால், பல போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் ஜொலிக்கின்றனர்.
விளையாட்டில் குறிப்பிட்ட நிலையை தாண்டுவதற்கும், திறமையை மேம்படுத்துவதற்கும், பயிற்சியாளர்கள் தேவைப்படுகின்றனர். விளையாட்டு உபகரணங்களுக்கான செலவு, ஆரோக்கிய உணவு, போக்குவரத்து செலவினம், பெற்றோரின் அனுமதி போன்றவை, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அரசு மாணவ மாணவியரின் விளையாட்டு ஆர்வத்துக்கு, தடையாக உள்ளன.
விளையாட்டில் அரசு பள்ளிகள் தற்போதுள்ளதை விட பிரகாசிக்க, அதற்காக ஒதுக்கப்படும் நிதியை அரசு அதிகரிக்க வேண்டும்; அரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு உடை, உபகரணங்களுக்கு ஸ்பான்ஸர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மாணவ, மாணவியரை விளையாட்டில் சேர்க்க தயங்கும் கிராமப்பகுதி பெற்றோருக்கு, உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment