Tuesday, November 11, 2014

ஒத்துழைக்காத சுகாதாரத்துறை: தவிக்கும் ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தில், ரத்த வகை குறித்த விவரங்களை பதிவு செய்வதற்கு, சுகாதாரத்துறை ஒத்துழைப்பு அளிப்பதில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்ட்" வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், மாணவர் பெயர், முகவரி, எடை, உயரம், ரத்த வகை, பள்ளியின் பெயர், வகுப்பு உட்பட பத்துக்கும் மேற்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில், மாணவர்களின் ரத்த வகை கண்டறிய சுகாதார துறை சார்பில், எவ்வித ஒத்துழைப்பும் இல்லாததால், பள்ளி நிர்வாகத்தினர் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 890 துவக்கப் பள்ளிகள், 293 நடுநிலை, 93 உயர்நிலை, 96 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். "ஸ்மார்ட் கார்டு" திட்டத்தில் பதிவுசெய்ய மாணவர்களின் ரத்தவகை கண்டறிவதற்கு ஆசிரியர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையங்களை பள்ளி ஆசிரியர்கள் அணுகியுள்ளனர். இப்பணிகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்களில், முறையான ஒத்துழைப்பு வழங்காமல், புறக்கணிப்பதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து சுகாதாரத் துறை சார்பிலும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், பள்ளி நிர்வாகத்தினர் செய்வதறியாது உள்ளனர்.
தலைமையாசியர் ஒருவர் கூறுகையில், "கல்வித்துறை சார்பில் கேட்கப்படும் விவரங்களை குறித்த நேரத்தில் அனுப்ப வேண்டியுள்ளது. மாணவர்களின் ரத்த வகை அறிவதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகினால், இப்பணிகளை செய்துதர மறுக்கின்றனர். இதனால், தனியார் ரத்த வங்கிகளை நாட வேண்டியுள்ளது. அவ்வங்கிகளில், ஒரு மாணவருக்கு 40 ரூபாய் கட்டணம் கேட்கின்றனர். மாணவர்களின் ரத்தவகை அனுப்புவதில் சுகாதாரத்துறை சார்பில் ஒத்துழைப்பு வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, "ரத்தவகை சோதனைக்கு அரசிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை. அப்படி வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

No comments:

Post a Comment