Sunday, November 30, 2014

திருவள்ளுவரின் பிறந்தநாள் வடஇந்தியப் பள்ளிகளில் கொண்டாடப்படும்: மத்திய அரசு

உலகப் புகழ்பெற்ற தெய்வீக கவி திருவள்ளுவரின் பிறந்தநாள், அடுத்தாண்டு, வட இந்திய பள்ளிகளில் கொண்டாடப்படுவதோடு, அவருடைய போதனைகள், பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்று மத்திய மனிதவள அமைச்சர் இரானி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய ஸ்மிருதி இரானி, "திருவள்ளுவரின் பிறந்தநாளை, வட இந்தியாவில் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதற்கான அரசாணை வெளியிடப்படும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி, "ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில், திருக்குறள், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்" என்றும் தெரிவித்தார்.
இதற்கான கோரிக்கை, உத்ரகாண்ட் மாநிலத்தின், பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் என்பவரால் அழுத்தமாக, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
தருண் விஜய் பேசும்போது, "மொழி என்பது இணைப்பை உருவாக்குவதாக இருக்க வேண்டும்; மாறாக, பேதமையை உண்டாக்குவதாக இருத்தல் கூடாது.
தென் இந்திய மொழிகளின் மீது, வட இந்தியா, பாராமுகமாக இருத்தல் கூடாது; குறிப்பாக, தமிழின் பெருமையை அறிந்துகொள்வது அவசியம்.
தமிழ் மொழியானது, மிகவும் பழமை வாய்ந்த ஒரு செம்மொழி. உலகம் முழுவதும் தனது தடத்தை இம்மொழியானது கொண்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் Register of Memory -ல், இந்தியாவிலிருந்து தேர்வான முதல் மொழி தமிழ்தான். இவ்வாறு, பல வகைகளில் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தார் தருண் விஜய்.
மத்திய அரசின் இந்த முடிவை, தமிழக கட்சிகள் மட்டுமின்றி, பல வட இந்திய கட்சிகளும் ஆதரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2000 ஆண்டுகளுக்கு முன்னதாக, தமிழகத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் திருவள்ளுவர், பவுத்த முனிவர் என்றும், சமண முனிவர் என்றும் அறிஞர்களால் வரையறுக்கப்படுகிறார். திருக்குறள் உலக நீதி நூல் என்ற சிறப்பு அடையாளத்துடன் போற்றப்படுகிறது.
திருக்குறளின் கருத்துக்கள், அவை எழுதப்பட்ட காலத்தில் மிக மிக புரட்சிகரமானவை என்பதோடு, அவற்றில் பெரும்பாலானவை, எக்காலத்திற்கும் பொருந்துவனவாக உள்ளதே, திருக்குறளின் சிறப்பு.
2000 ஆண்டுகளுக்கு முன்பே, இப்படிப்பட்ட ஒரு நூலை எழுதிய ஒருவர், சாதாரண மனிதராக இருக்க முடியுமா? என்ற கேள்விகளும் இருக்கின்றன. தமிழ் பாரம்பரிய மேன்மையின் சிறந்த அடையாளங்களுள், முதன்மையானதாக போற்றப்படுகிறது திருக்குறள்!

No comments:

Post a Comment