Tuesday, January 7, 2014

திருநெல்வேலியில் உருவான "கிரையோஜெனிக்" ராக்கெட்: இணை இயக்குனர் பெருமிதம்

ஜி.எஸ்.எல்.வி.,யில் பொருத்தப்பட்ட "கிரையோஜெனிக்" ராக்கெட் திருநெல்வேலியில் உள்ள மகேந்திரபுரி திரவ இயக்க திட்ட மையத்தில் தயாரிக்கப்பட்டது" என்றார், அதன் இணை இயக்குனர் கார்த்திகேயன்.

ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி.,டி5 ராக்கெட்டை செலுத்திய பின் மதுரைக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: "இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட "கிரையோஜெனிக்" ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது, பெருமையான விஷயம். அதிலிலுள்ள திரவநிலை மற்றும் கிரையோஜெனிக் (ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அடங்கியது) நிலை ஆகிய இரண்டு நிலைகளும் மகேந்திரபுரியில் தான் வடிவமைக்கப்பட்டது.
ராக்கெட் ஆராய்ச்சியில் அனைத்து பரிசோதனைகளும் இங்கு முடிந்தபின் தான், ஸ்ரீஹரிகோட்டா கொண்டு செல்லப்பட்டது. ரஷ்யாவில் தொழில்நுட்பத்தை வாங்கவே திட்டமிட்டிருந்தோம். ஆனால் தொழில்நுட்பம் தராமல் அந்தந்த நிலைகளை தருவதாக கூறியதால் முழுவதும் ஆராய்ச்சி செய்வதற்கு 20 ஆண்டுகள் ஆனது. தொழில்நுட்பத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
ஜி.எஸ்.எல்.வி., டி 5 ராக்கெட்டில் ஜி சாட் 14 செயற்கைகோள் பொருத்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட 180 கிலோமீட்டர் சுற்றுப்பாதை இலக்கை அடைந்துள்ளோம். இந்தியாவில் முதன்முதலில் தயாரான கிரையோஜெனிக் ராக்கெட் இதுதான் என்பது பெருமையான விஷயம். தற்போது தொழில்நுட்பத்தின் அடுத்த நிலைக்கு சென்றுள்ளோம்.
சந்திராயன் 2ல் மனிதரை அனுப்பும் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை. சந்திராயன் 1 மூலம் நிலவில் உள்ள நீர் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டது. கனிமங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது" என்றார்.

No comments:

Post a Comment