Thursday, September 19, 2013

10, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு முதல்முறையாக ஆன்-லைனில் நுழைவுச்சீட்டு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக முதல் முறையாக ஆன்-லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

இந்த ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்வதில் எந்தவிதப் பிரச்னையும் எழவில்லையென்றால், வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வுகளுக்கும் இந்த முறை அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு வரும் திங்கள்கிழமை (செப்.23) தொடங்குகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் www.tndge.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டன.
வியாழக்கிழமை (செப்.19) காலை முதல் திங்கள்கிழமை (செப்.23) காலை வரை ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த இணையதளத்தில் HIGHER SECONDARY SSLC SUPPLEMENTARY EXAMINATION, SEPTEMBER, OCTOBER 2013 HALL TICKET PRINT OUT என்ற வாசகத்தை மாணவர்கள் கிளிக் செய்ய வேண்டும்.
தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியைப் பதிவு செய்தால் அந்தந்த தேர்வர்களுடைய ஹால் டிக்கெட் திரையில் வரும். அதைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பத்தாம் வகுப்புத் தேர்வுக்காக 47 ஆயிரம் மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளும் பிளஸ் 2 தேர்வுக்காக 41 ஆயிரம் மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேவராஜன் கூறினார்.
ஹால் டிக்கெட்டில் புகைப்படம் முற்றிலும் பதிவாகாத, மிகவும் சிறியதாகப் பதிவாகியுள்ள தனித்தேர்வர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பத்தையும் எடுத்துக்கொண்டு, உடனடியாக அருகில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்.
பிளஸ் 2 தேர்வில் எழுத்துத் தேர்வும், செய்முறைத் தேர்வும் கொண்ட பாடங்களில் செய்முறைத் தேர்வுகளில் 40 மதிப்பெண்ணுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெறாதவர்கள், கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்வுக்கும் வர வேண்டும்.
செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வர வேண்டும்.
முதல்முறையாக மேல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நேரடித் தனித்தேர்வர்கள், மொழிப்பாடம் இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு மொழி (தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக எழுத வேண்டும்.
இதற்கான தேதி, விவரங்களை சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் அறிந்துகொள்ள வேண்டும்.
தத்கல் திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பித்த தேர்வர்கள் செப்டம்பர் 21, 22 தேதிகளில் ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஹால் டிக்கெட் தபால் மூலம் அனுப்பப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment