Friday, September 20, 2013

பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் முறைகேடு? தேர்வுத்துறை மீண்டும் ஆய்வு

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பின் நடந்த மறு மதிப்பீட்டு விடைத்தாள்கள் அனைத்தையும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழு மூலம், மீண்டும், தேர்வுத்துறை ஆய்வு நடத்தி வருகிறது. மறு மதிப்பீட்டில், முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் காரணமாக, நான்கு மாதங்களுக்குப் பின், மீண்டும், விடைத்தாள்களை ஆய்வு செய்யும் பணியில், தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கை நடந்து வருவதால், பிளஸ் 2 தேர்வில், முக்கிய பாடங்களில், மதிப்பெண் குறைந்து விட்டதாக கருதும் மாணவர்கள், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கின்றனர்.
இதில், அதிக மாணவர்களுக்கு, கூடுதலாக மதிப்பெண் கிடைக்கிறது. இந்த மறு மதிப்பீடு விவகாரம், மர்மம் நிறைந்ததாகவே, இன்று வரை இருந்து வருகிறது. "இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை" என, பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதிக மாணவர்கள், இந்த திட்டத்தில் கூடுதல் மதிப்பெண் பெற்று, விரும்பிய படிப்புகளில் சேர்ந்து விடுகின்றனர்.
கடந்த மார்ச்சில் நடந்த பொதுத்தேர்வுக்குப்பின் நடந்த மறு மதிப்பீட்டில், 2,500 பேருக்கு, மதிப்பெண் அதிகரித்தது. 1,500 பேருக்கு, ஏற்கனவே எடுத்த மதிப்பெண் குறைந்தது. 2,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண்களில், எவ் வித மாற்றமும் ஏற்படவில்லை.
மேலும், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள் கூட, மதிப்பீடு செய்தது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்து முடிந்து, நான்கு மாதங்கள் கடந்த நிலையில், மறு மதிப்பீட்டு திட்டத்தில் திருத்தப்பட்ட அனைத்து விடைத்தாள்களையும், தற்போது, தேர்வுத்துறை, தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
பாட வாரியாக, அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழுவைக்கொண்டு, தேர்வுத்துறை இயக்குனரகத்தில், இந்தப் பணி, சத்தம் இல்லாமல், செய்யப்பட்டு வருகிறது. இப்போது திடீரென, மறுமதிப்பீட்டு விடைத்தாள்களை ஆய்வு செய்ய வேண்டியதற்கான அவசியம் என்ன, என்பது குறித்து விசாரித்த போது, திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
மறு மதிப்பீட்டு திட்டத்தில் நடந்த குளறுபடி மற்றும் இதர சில முக்கிய விவரங்கள் குறித்து, சமீபத்தில், தேர்வுத்துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை கண்டறிய, அனைத்து விடைத்தாள்களையும், மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்யும் பணியில், தேர்வுத்துறை இறங்கியுள்ளது.
மறு மதிப்பீடு, சரியான முறையில் நடந்துள்ளதா, மதிப்பெண் அளிப்பதில், சலுகை காட்டப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விவரங்களை, தேர்வுத்துறை ஆய்வு செய்து வருகிறது. இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்து, மறுமதிப்பீட்டின் போது, விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள், கலக்கம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment