Monday, September 30, 2013

ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளின் நிலை குறித்து சர்வே

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட பின், பள்ளிகளில் காணப்படும் நிலை குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சர்வே துவக்கியுள்ளது.

பெற்றோர்களின் மெட்ரிக் பள்ளிகள் மீதான ஆங்கில வழிக்கல்வி மோகத்தால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு தோறும் ஆரம்ப கல்வியில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கடந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், அதற்கான எந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்யவில்லை.
இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வியை துவக்கியதால், தாய் மொழி கல்விக்கு "நெருக்கடி" ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர் வட்டாரங்கள் கூறியுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் சர்வே எடுத்து வருகிறது.
இப்பணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் கூறுகையில், "ஆங்கில வழிக்கல்வியால், தாய்மொழி கல்விக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி, தமிழகம் முழுவதும் சர்வே செய்து, சில பரிந்துரைகளை பள்ளிக் கல்வித்துறைக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

No comments:

Post a Comment