Sunday, September 22, 2013

பிளஸ் 2 காலாண்டு தேர்வில் குளறுபடி: மாணவர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 காலாண்டு தேர்வு வேதியியல் வினாத்தாளில், பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்., 10ல் துவங்கியது. நேற்று நடந்த வேதியியல் தேர்வில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இல்லாத, அனைவுச் சேர்மங்கள், புறப்பரப்பு வேதியியல், உயிர் வேதியியல், நடைமுறை வேதியியல் ஆகிய, நான்கு பாடங்களில் இருந்து, கேள்விகள் கேட்கப்பட்டன.
ஒரு மதிப்பெண் கேள்வியில், எட்டும்; மூன்று மதிப்பெண் கேள்வியில், நான்கும்; ஐந்து மதிப்பெண் கேள்வியில் இரண்டும்; 10 மதிப்பெண்கள் கேள்வியில் ஐந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு, மூன்றுக்கு விடையளிக்க கூறப்பட்டிருந்தது. இந்த குளறுபடியால், தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வேதியியல் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "ஒன்று முதல் ஐந்து, எட்டு முதல் 11 மற்றும் 15 முதல் 18 ஆகிய பாடங்களில் இருந்து மட்டுமே, கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால், அறிவிக்கப்படாத பாடங்களில் இருந்து, 19 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களுக்கு, 150 மதிப்பெண்ணில், 60 மதிப்பெண்கள் வரை, இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது" என்றார்.
திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர், சுகுமார் தேவதாஸ் கூறுகையில், "மாநில அளவில் ஒரே வினாத்தாள் என்பதால், எங்களால் எதுவும் செய்ய முடியாது," என்றார்.

No comments:

Post a Comment