Thursday, September 26, 2013

மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் கொடுக்கக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது 4 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர்கள் போராட்டம் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மறியல் போராட்டம் நடந்தது.
சங்க தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். 6–வது ஊதியக்குழுவில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கி உள்ள ஊதியத்தை தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1–1–2006–ந்தேதி முதல் வழங்கவேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்துசெய்து வேலைவாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் பணிநியமிக்கவேண்டும். அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் மற்றும் வரலாறு ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த போராட்டம் நடந்தது.
அப்போது ஏராளமான ஆசிரியர்கள் கொடி ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் வே.மணிவாசகம் பேசினார்.
ஆசிரியர்கள் கைது 
மறியல் போராட்டத்தை அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் சு.ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். மறியல் செய்த ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். மொத்தம் 4 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டனர். இன்றும் (வியாழக்கிழமை) மறியல் போராட்டம் தொடர்கிறது.

No comments:

Post a Comment