Thursday, September 26, 2013

7.4 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு நிதி மேலாண்மைப் பயிற்சி

தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில், 7.4 லட்சம் மாணவர்களுக்கு, நிதி மேலாண்மை குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, தேசிய பங்குச்சந்தை நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நிதி தொடர்பான முடிவுகளை எடுக்க உதவும் வகையில், தமிழகத்தில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, தேசிய பங்குச் சந்தை நிறுவனம், பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது. பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து, எட்டு, ஒன்பது மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, நிதி மேலாண்மை குறித்து, பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டில், 7.4 லட்சம் மாணவ, மாணவியருக்கு, பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, தேசிய பங்குச் சந்தை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு, 25 வகுப்புகள், நிதி மேலாண்மை குறித்து, பாடம் நடத்தப்படுகிறது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நிதி மற்றும் நிதி மேலாண்மை, பணத்தின் பரிணாம வளர்ச்சி, நிதி திட்டமிடல், வங்கி, சேமிப்பு; ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, நிதி மேலாண்மை, பட்ஜெட் தயாரித்தல், பங்கு வெளியீட்டு சந்தைகள், பண வீக்கம், காப்பீடு, பொருளாதாரம்; பிளஸ் 1 மாணவர்களுக்கு, நிதி சந்தை ஆவணங்கள், ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் உள்ளிட்ட பல பிரிவுகள்; பிளஸ் 2 மாணவர்களுக்கு, சந்தை குறியீடு, "ஆன்–லைன்" வர்த்தகம், கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம், வணிகம் மற்றும் தீர்வுகள் ஆகிய தலைப்புகளிலும், பாடம் நடத்தப்படுவதாக, தேசிய பங்குச் சந்தை நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment