Sunday, September 22, 2013

மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்து அடாவடி: தலைமையாசிரியர் நிர்பந்தத்தால் பெரும் அதிர்ச்சி

முதல் பருவத்தேர்வு வினாத்தாள் அச்சடிக்க, பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 795 துவக்கப்பள்ளிகள், 226 நடுநிலைப்பள்ளிகள் என, மொத்தம் 1,021 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், செப்டம்பர் 23ம் தேதி முதல், முதல் பருவத்தேர்வு துவங்குகிறது. முதல் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என நான்கு தேர்வும், மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் என, ஐந்து தேர்வுகள் நடக்கிறது.
கடந்த ஆண்டு, மாநிலம் முழுவதும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டது. அதற்காக, ஒவ்வொரு மாணவ, மாணவியரிடமும், தலா ஐந்து ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இது, பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து, இந்த ஆண்டு, அந்தந்த பள்ளியிலேயே வினாத்தாள் தயார் செய்து, தேர்வு நடத்த வேண்டும் என, மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட, ஒரு சில பள்ளித் தலைமையாசிரியர்கள், அச்சடிக்கப்பட்ட வினாத்தாளை வழங்கி, தேர்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, தனியார் பிரிண்டிங் பிரஸ்சில், வினாத்தாள் அச்சடிக்க வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக, ஒவ்வொரு மாணவரிடமும், குறிப்பிட்ட தொகையை கட்டாயம் வசூல் செய்துள்ளனர். முதல், இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் தலா 7.50 ரூபாய், மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம், தலா 10 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அதற்கு, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மறுப்பு தெரிவித்தும், அதை ஏற்றுக்கொள்ளாத, ஒருசில பள்ளித் தலைமையாசிரியர்கள், கட்டாயப்படுத்தியதால், வேறுவழியின்றி, அவர்களும், மாணவர்களிடம் பணம் வசூல் செய்து வழங்கியுள்ளனர். இது, கல்வியாளர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான, முதல் பருவத்தேர்வு, செப்டம்பர் 23ம் தேதி முதல் துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது. அதற்காக, அந்தந்த பள்ளி ஆசிரியர்களே வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அவற்றை ஒரு சில பள்ளித் தலைமையாசிரியர்கள் பின்பற்றவில்லை. மாறாக, தனியார் பிரிண்டிங் பிரஸ்சில் அச்சிடப்பட்ட வினாத்தாளை கொண்டு தேர்வு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக, மாணவ, மாணவியரிடம் கட்டணம் வசூல் செய்துள்ளனர்.
ஒவ்வொரு பள்ளிக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 10,000 முதல் 15,000 ரூபாய் வரை, பராமரிப்பு நிதி வழங்கப்படுகிறது. அதில், குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வினாத்தாள் அச்சடிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். அதை தவிர்த்து, ஏழை மாணவர்களிடம் வசூல் செய்வது, எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment