Monday, September 30, 2013

தமிழக ஆராய்ச்சி மாணவருக்கு "நாசா" ஆய்வு மையம் அழைப்பு

சென்னை அண்ணா பல்கலை ஆராய்ச்சி மாணவரும், கம்பத்தை சேர்ந்தவருமான சலீம்கானுக்கு, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அழைப்பு விடுத்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற நூலகர் அம்சத் இப்ராகிம்கான், ஹசீனா தம்பதியினரின் மகன் சலீம்கான். இவர் சென்னை அண்ணா பல்கலையில் காலநிலை மாற்றத்தினால் உண்டாகும் கடல்மட்ட உயர்வும், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார்.
கடந்த 2008 ல் ஐ.நா., தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஐந்தாவது இளைஞர் மாநாட்டில் பங்கேற்று, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கான ஐ.நா.வின் இளம் விழிப்புணர்வாளர் விருதை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், அங்குள்ள தேசிய அறிவியல் பவுண்டேஷனும் இணைந்து "புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகளை" நடத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சிகளை உலகம் முழுவதும் தீவிரப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதற்காக, இந்த தலைப்பில் ஆய்வறிக்கைகளை வரவேற்றது. உலக நாடுகளில் இருந்து 249 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சிறந்த 40 ஆய்வறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், சலீம்கானின் ஆய்வறிக்கையும் ஒன்றாகும். தென் கிழக்கு ஆசியாவில் இருந்து இவரது ஆய்வறிக்கை மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களுடன், நாசாவின் மூத்த விஞ்ஞானிகள் வரும் அக்., 12 முதல் 19 ம் தேதி வரை கலந்துரையாடல் நடத்துகின்றனர். இதில் பங்குபெற உள்ள முனைவர் சலீம்கான் கூறுகையில், "கடல்மட்ட உயர்வால், எதிர்காலத்தில் தமிழக கடலோரங்களில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் அதனை சார்ந்து வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதற்காக சுற்றுப்புறச் சூழல் சார்ந்த சமுதாயத்தை மையமாக கொண்ட தகவலமைப்பு முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment