Thursday, September 19, 2013

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட்., சீட் ரூ.1 லட்சம்

பி.எட்., இடங்கள், சுயநிதி கல்லூரிகளைக் காட்டிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இம்முறை அதிக விலைக்கு விற்கப்படுவதாக பெற்றோரும், மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் செல்லும் மாணவர்களிடம் அதிகபட்சம் ரூ. 50,000 வரை கேட்கப்படுவதாகவும், நிர்வாக இடத்தில் சேரும் மாணவர்களிடம் ரூ.1 லட்சம் வரை கேட்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கலந்தாய்வு மூலம் அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தேர்வு செய்த பலர் இடங்களைத் திருப்பி கொடுத்துவிட்டு, சுயநிதி கல்லூரிகளில் சேர முனைந்து வருவதாக பெற்றோரும், கலந்தாய்வு அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 2,118 பி.எட். இடங்களுக்கான கலந்தாய்வை சென்னை காமராஜ் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நடத்தி வருகிறது.
முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ஆம் தேதி முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (செப்.17) தொடங்கியது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியவுடன், ஏற்கெனவே சென்னை சைதாப்பேட்டை அரசு பி.எட். கல்லூரியில் இடங்களைத் தேர்வு செய்திருந்த 16 பேர், விடுதி வசதி இல்லை என்று கூறி இடங்களை திருப்பியளித்தனர்.
இதுபோல், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடங்களைத் தேர்வு செய்திருந்த ஏராளமானோர் இடங்களை திருப்பியளித்தனர். இவர்களில் சிலர் கல்லூரிகளில் அதிக கட்டணம் கேட்கப்படுவதாகவும், போதிய வசதிகள் இல்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து விருதுநகரைச் சேர்ந்த பார்வதி என்பவர் கூறுகையில், எனது மகளுக்கு சென்னையில் மத்தியப் பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. கல்லூரியில் அதிகபட்சம் ரூ. 8,000 வரை கல்வி கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்று நினைத்துச் சென்றபோது, கல்லூரி நிர்வாகம் ரூ. 45,000 செலுத்துமாறு கூறியது பெரும் அதிரச்சியை அளித்தது. இவ்வளவு தொகை செலுத்த முடியாது என்பதால், தேர்வு செய்த இடத்தை திருப்பியளித்துவிட்டு சொந்த ஊருக்கு அருகில் உள்ள சுயநிதி கல்லூரியில் மகளை சேர்க்க முடிவு செய்துவிட்டேன் என்றார்.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திடமும் இதுபோன்ற புகார்கள் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
சென்னையில் உள்ள சில அரசு உதவி பெறும் கல்லூரிகள் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. மகளிர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி ஒன்று ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் உறவினரிடமே பி.எட். சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்துமாறு கூறியிருப்பதாகவும் புகார் வந்தது. இந்த வாய்மொழி புகார் குறித்து விசாரித்த போது, கல்விக் கட்டணமாக ரூ.33,000, சீருடைக் கட்டணம் ரூ.10,000, கட்டாய விடுதி மற்றும் உணவுக் கட்டணமாக ரூ.50,000-மும் வசூலிப்பது தெரியவந்தது. ஆனால், பாதிக்கப்படுபவர்கள் எழுத்துப் பூர்வமான புகார் அளிக்க மறுப்பதால் அந்த கல்லூரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எச்சரிக்கை மட்டும் செய்துள்ளோம் என்றார்.
எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும்
சுயநிதி பி.எட். கல்லூரிகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் -நேக்- (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) அங்கிகாரம் பெற்ற கல்லூரிகள் பி.எட். படிப்புக்கு ரூ. 46,500-ம், இந்த அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் ரூ. 41,500-ம் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக் கூடாது.
அரசுக் கல்லூரிகளில் அதிகபட்சமாக ரூ.2,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு கல்லூரி கட்டணத்தை மட்டுமே, அரசு உதவி பெறும் கல்லூரிகளும் வசூலிக்க வேண்டும். கட்டாய விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் என எந்தவித கூடுதல் கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது.
ஆனால், இந்த உத்தரவுகளை அரசு உதவி பெறும் கல்லூரிகள் மதிப்பதே இல்லை.
ஆந்திர மாநிலத்தில், அரசு பி.எட். கல்லூரிக்கான கல்விக் கட்டணம் ரூ. 2,000 எனவும், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணம் ரூ. 18,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் கட்டணங்கள் கலந்தாய்வு நடைபெறும் இடத்திலேயே மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு, பின்னர் அந்தந்த கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இதுபோன்று தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்

No comments:

Post a Comment