Thursday, September 26, 2013

அங்கீகாரம் பெறாமல் மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் எம்.எட். கல்லூரிகள்

தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நேக்) அங்கீகாரம் பெறாத சில கல்லூரிகள் பல்கலைக்கழக எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து எம்.எட்., படிப்பில் மாணவர்களை சேர்த்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையே, தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அங்கீகாரம் பெறாத 21 கல்லூரிகளில், 7 கல்லூரிகளுக்கு தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை (செப்.24) வெளியிட்டது.
மீதமுள்ள கல்லூரிகள் முறையான அனுமதி பெற்ற பிறகு அல்லது பல்கலைக்கழகத்திடம் உரிய விளக்கத்தை அளித்தால் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 674 கல்லூரிகளில் பி.எட்., படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சிலவற்றில் எம்.எட்., முதுநிலைக் கல்வியியல் கல்வி படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கல்லூரிகளில் பி.எட்., படிப்பில் 100 இடங்களுக்கு உள்பட்டு இருந்தால், அவை "நேக்' அங்கீகாரம் பெறத் தேவையில்லை. தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அனுமதி பெற்றிருந்தால் போதுமானது.
ஆனால், பி.எட். படிப்பில் 100 இடங்களுக்கு மேல் வைத்திருந்தாலும், எம்.எட். படிப்பை நடத்துவதற்கும் என்.சி.டி.இ. அனுமதியோடு, "நேக்' அங்கீகாரமும் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு "நேக்' அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் எம்.எட்., படிப்பை நடத்தவே முடியாது.
ஆனால், தமிழகத்தில் 21 கல்லூரிகள் "நேக்' அங்கீகாரம் பெறாமல் எம்.எட்., படிப்பை நடத்தி வருவதைக் கண்டறிந்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அந்த கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு, கடந்த 2013 மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகளையும் நிறுத்தி வைத்தது.
இந்த நடவடிக்கைக்குப் பிறகும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் 2013-14 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தேர்வு முடிவுகள் வெளியீடு:
இது குறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
நடவடிக்கை எடுக்கப்பட்ட 21 கல்லூரிகளில் 7 கல்லூரிகள் விளக்கம் அளித்ததோடு, உரிய அனுமதியையும் பெற்றுள்ளன. எனவே அந்தக் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
ஆனால், மீதமுள்ள கல்லூரிகள் உரிய விளக்கம் அளிக்காததோடு, "நேக்' அங்கீகாரம் பெற எந்தவித முயற்சிகளையும் எடுக்காமல் தொடர்ந்து 2013-14 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையிலும் ஈடுபட்டுள்ளன.
இந்தக் கல்லூரிகள் அங்கீகாரம் பெற முயற்சி எடுத்து, உரிய விளக்கத்தை அளித்தால் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இல்லையெனில் தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் அவற்றின் மீது பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment