Monday, September 30, 2013

நெருங்கும் கேட் தேர்வு - நீங்கள் தயாரா?

இந்தியாவின் 13 ஐ.ஐ.எம்.,களில் மொத்தமுள்ள 3,000 இடங்களில், எப்படியாவது ஒன்றில் இடம்பிடித்துவிட வேண்டும் என்பதே, சி.ஏ.டி., தேர்வை எழுதும் ஒவ்வொரு மாணவரின் ஏக்கமாக இருக்கிறது.
எனவே, அக்டோபர் மாத மத்தியில் தொடங்கும் கேட் தேர்வை, நல்லபடியாக எழுத வேண்டும் என்ற பதைபதைப்பில் தற்போது மாணவர் உலகம் இருக்கிறது.

தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தேர்வுக்கு படிக்கத் தேவையான அனைத்து பகுதிகளிலும் ஒரு ரவுண்டு வந்திருப்பீர்கள் என்று நம்பலாம். மேலும், ஒவ்வொரு பகுதியிலும் எந்தமாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இத்தகையதொரு முன்தயாரிப்பு, அடுத்த நிலைக்கு உங்களைத் தயார்படுத்தும்.
இந்த அளவிலான உங்களின் முன்தயாரிப்பு, கேட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நம்மால் விடையளிக்க முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு வழங்கும். தற்போது, இந்த முன்தயாரிப்பு நிலை, அடுத்த உயர் கட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது. அப்போதுதான், IIM போன்ற கல்வி நிறுவனங்களை உங்களால் அடைய முடியும்.
கடந்த சில வருடங்களில், நன்கு தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக, கேட் தேர்வு பரிணமித்துள்ளது. இரண்டு பிரிவுகளிலும், தலா 60 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் என்பது நமக்குத் தெரியும் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் பதிலளிக்க தலா 70 நிமிடங்கள் என்பதும் நமக்குத் தெரியும். தேர்வு நெருங்கும் இறுதி காலகட்டத்தில், உங்களின் கடைசிகட்ட முயற்சியானது, ஒரு கேள்விக்கு, எந்தளவு சுருக்கமான முறையில் பதிலைக் கண்டுபிடித்து, அதன்மூலம் நேரத்தை சேமித்து, அதிக கேள்விகளுக்கு பதிலளித்து, நமது மதிப்பெண்களைக் கூட்டலாம் என்பதாக இருக்க வேண்டும்.
Shortcuts
நீங்கள் ஏற்கனவே, கேள்விகளுக்கான பதிலை போட்டுப் பார்த்து, அவற்றுக்கு தீர்வுகண்டு பயிற்சி செய்திருப்பீர்கள். அதேசமயம், அவற்றை திரும்பவும் செய்து பார்க்கும்போது, ஒரு முக்கியமான அம்சம் என்னவெனில், அவற்றுக்கான Shortcut முறையைக் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் மிகவும் முக்கியமானதொரு அம்சம்.
ஏனெனில், ஒவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க, நீங்கள் அதிகநேரம் எடுத்துக்கொண்டால், குறிப்பிட்ட நேரத்திற்குள், கொடுக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடைகாண இயலாமல் போகும். எனவே, கோச்சிங் மையங்களில் கற்றுக்கொடுக்கப்பட்ட அல்லது நீங்களே முயன்று உருவாக்கிய வழிமுறைகளில், ஒரு கேள்விக்கான பதிலை காண்பதற்கான shortcut வழிமுறையை உருவாக்க வேண்டும்.
மாதிரி தேர்வுகள்
கேட் தேர்வு பயிற்சிக்கு மாதிரித் தேர்வுகளை எழுதுவது, மிக முக்கியமான ஒரு அம்சம். எனவே, வாரத்திற்கு இருமுறை, All India Smart CAT -ஐ எழுதுதல் முக்கியம். அப்போதுதான், அனைத்து பகுதிகளிலும் உங்களுக்கு பயிற்சி கிடைக்கும். இத்தேர்வை கடமைக்காக எழுதுதல் கூடாது. ஒவ்வொரு தேர்வு முடிவிலும், நீங்கள் எந்தப் பிரிவில் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கிறீர்கள் மற்றும் அடுத்து உங்களின் நடவடிக்கை என்ன என்பதை திட்டமிட வேண்டும்.
பலவீனமான பகுதிகளை நன்கு படித்து, உங்களை தயார்செய்து கொள்ள வேண்டும். இந்த மாதிரித் தேர்வுகளை தொடர்ந்து எழுதுவதன் மூலம், எத்தகைய கேள்விகளுக்கு, நீங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள் மற்றும் எத்தகைய கேள்விகளுக்கு குறைவான நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என்பதை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
நேர மேலாண்மை
கேட் தேர்வெழுதும் செயல்பாட்டில், நேரத்தை பிரித்து வைத்துக்கொண்டு செயல்படுவது, புத்திசாலித்தனமான செயல்பாட்டைக் குறிக்கும். உதாரணமாக, இரண்டு பகுதிகளுக்கும், நேரத்தை இரண்டு 40 நிமிடங்கள் மற்றும் இரண்டு 30 நிமிடங்கள் என்ற வகையில் பிரித்துக்கொள்ளலாம். அந்த 40 நிமிடங்களில், உங்களுக்கு நன்றாக தெரிந்த வினாக்களுக்கு விடையெழுதி விட்டு, அடுத்த 30 நிமிடங்களுக்கு உங்களால் பின்னர் செய்யலாம் என்று விடப்பட்ட, உங்களுக்கு சுமாராக தெரிந்த மற்றும் சற்று கடினமாக நினைக்கக்கூடிய வினாக்களுக்கு விடையளிக்கலாம்.
அதேசமயம், கேட் தேர்வானது வெறும் வேகம் சம்பந்தமானது மட்டுமல்ல. நுணுக்கம் என்பது மிகவும் முக்கியம். நீங்கள், ஒரு கேள்விக்கு விடையளிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைவிட, அதற்கு எந்தளவு மிகச் சரியாக விடையளித்து இருக்கிறீர்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இதர தகவல்கள்
* இந்த 2013ம் ஆண்டிற்கான கேட் தேர்வு, அக்டோபர் 16ம் தேதி தொடங்கி, நவம்பர் 11ம் தேதி வரை, நாடு முழுவதும், 40 நகரங்களில் நடத்தப்படுகிறது.
* கடந்தாண்டு என்ன pattern கேட்கப்பட்டதோ, அதேதான் இந்தாண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Quantitative Ability, Data interpretation and Verbal ability, Logical Reasoning போன்றவை அதன் பகுதிகள்.
* இரண்டு பகுதிகளுக்கும், தலா 70 நிமிடங்கள் ஒதுக்கப்படும்

No comments:

Post a Comment