Friday, September 20, 2013

தோல்வியடைந்த கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் சரியே: உயர் நீதிமன்றம்

தேர்வில் தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்தது சரியே; ஜனவரிக்குள், தேர்வு நடவடிக்கையை, பள்ளிக்கல்வித் துறை முடித்துவிட வேண்டும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், தனியார் ஏஜன்சி மூலம், கணினி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். 2006, அக்டோபரில், 1,880, கணினி ஆசிரியர் பணியிடங்களை, அரசு ஏற்படுத்தியது. ஏற்கனவே பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், முறையாக நியமிக்கப்படாததால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், சிறப்பு தேர்வு நடத்தி, தகுதி பெறுபவர்களை, பணிவரன்முறை செய்வது என, அரசு முடிவெடுத்தது.
இந்த முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட் வரை, வழக்கு சென்றது. "தேர்வில், குறைந்தபட்சம், 50 சதவீதம் பெறுபவர்களை, பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்&' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கடந்த, 2008ல் நடந்த தேர்வில், 894 பேர், 50 சதவீத மதிப்பெண் பெற்றனர். 2010ல், நடந்த தேர்வில், 125 பேர், வெற்றி பெற்றனர். கடந்த, டிசம்பரில் நடந்த தேர்வில், 15 பேர் வெற்றி பெற்றனர்.
தேர்வில் வெற்றி பெறாதவர்களை, பணி நீக்கம் செய்ய, அரசு முடிவெடுத்து, அதற்கான, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, "தற்காலிக கணினி ஆசிரியர்களை, பணிவரன்முறை செய்ய முடியாது; விண்ணப்பங்களை வரவேற்று, காலியிடங்களை நிரப்பலாம்; புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை, தற்காலிக பணியாளர்கள், பணியில் தொடரலாம்" என உத்தரவிட்டார்.
கணினி ஆசிரியர் பணிக்கு, வெளிச்சந்தையில் விண்ணப்பங்களை வரவேற்றதையும், பணிவரன்முறை தொடர்பான உத்தரவையும் எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்தும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்&' விசாரித்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அரசு பிளீடர் டி.கிருஷ்ணகுமார் ஆஜராகினர். மனுக்களை விசாரித்த, "டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: தகுதி தேர்வில் கலந்து கொள்ள, இரண்டு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும், 50 சதவீத மதிப்பெண்களை, மனுதாரர்களும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும், பெறவில்லை.
"தோல்வியடைந்தவர்களை, பள்ளிகளில் நியமிக்க தகுதியில்லை" என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. எனவே, பணிவரன்முறை செய்ய கோர, அவர்களுக்கு உரிமையில்லை. பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப, நடவடிக்கை எடுக்கும் போது, தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்தது சரி தான்.
தோல்வியடைந்தவர்கள், பணியில் நியமிக்க உரிமை கோர முடியாது என, சுப்ரீம் கோர்ட் கூறும்போது, அவர்கள் பணியில் தொடரவும் உரிமையில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து, கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களின் பெயர்களை, வேலைவாய்ப்பகத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
அவர்களுக்கு, பழைய, "சீனியாரிட்டி" அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மற்றவர்கள் போல், மனுதாரர்களும் விண்ணப்பிக்க தகுதி உள்ளது. மனுதாரர்கள், முன்னுரிமை கோர முடியாது. வயது வரம்பை தளர்த்த, அவர்கள் கோரலாம். அதை, தகுதி அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.
கணினி ஆசிரியர் பணியிடங்களில், வரும் ஜனவரிக்குள், தேர்வு நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறையின், முதன்மை செயலருக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்" உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment