Friday, September 27, 2013

கடந்த 7 மாதத்தில் 4,062 அரசு பணிகள் நியமனம்: குரூப்–1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கடந்த 7 மாதங்களில் 4,062 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,391 பேர்கள் கலந்து கொள்ளும் குரூப்–1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையதலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், தினத்தந்தி நிருபரின் கேள்விகளுக்கு பதிலளித்ததாவது:–

குரூப்–1 தேர்வு
கேள்வி: குரூப்–1 தேர்வு அறிவிப்பு தள்ளி போவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறதே? எப்போது தேர்வு அறிவிப்பு வெளியாகும்?
பதில்: தமிழக முதல்–அமைச்சர், அரசு பணியிடங்களில் காலியாகும் பணியிடங்களை கண்டறிந்து உடனுக்குடன் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து பணி நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது. தற்போது குரூப்–1 தேர்வு நடத்துவதற்காக அனைத்து துறைகளிலும் காலிபணியிட விபரங்களை தெரிவிக்க கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைகளாக காலிபணியிடங்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தொகுத்து விரைவில் குரூப்–1 தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்கும் பணிகள் நடந்து வருகிறது.
காலிபணியிடங்கள்
கேள்வி: குரூப்–1 தேர்வில் என்ன? என்ன? பணிகளுக்கு, எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்?
பதில்: துணை–கலெக்டர், டி.எஸ்.பி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு மற்றும் பதிவுத்துறை பதிவாளர், வணிகவரித்துறை உதவி–ஆணையர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலிபணியிடங்களை பொறுத்து பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
4,062 பணியிடங்கள்
கேள்வி: நீங்கள் பதவி ஏற்றதிலிருந்து தற்போது வரை எத்தனை அரசு பணியிடங்களில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்?
பதில்: கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை அதாவது கடந்த 7 மாதங்களில் 4,062 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
நல்ல வரவேற்பு
கேள்வி: குரூப்–2 தேர்வுக்கு அக்டோபர் 4–ந்தேதி கடைசி தேதி என்று அறிவித்த நிலையில் தற்போது வரை எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர்?
பதில்: குரூப்–2 தேர்வு மூலம் அரசு பணியில் சேர்வதற்காக இளைஞர்களிடமிருந்து எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு உள்ளது.
1,391 பேருக்கு மெயின் தேர்வு
கேள்வி: 2012–ஆம் ஆண்டுக்கான குரூப்–1 மெயின்தேர்வுக்கான காலிபணியிடங்கள் எத்தனை? எப்போது மெயின்தேர்வு நடக்கிறது? முதன்மை தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
பதில்: துணை–கலெக்டர்–8, டி.எஸ்.பி.4, வணிகவரித்துறை உதவி–ஆணையர் 7, பதிவுத்துறை பதிவாளர் 1, மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர்கள் 5 உட்பட 25 பதவிகளுக்கு 75 ஆயிரத்து 704 பேர் முதன்மை தேர்வு எழுதினர். இவற்றிலிருந்து 1,391 பேர்கள் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடக்கிறது.
ஆன்–லைன் விண்ணப்பம்
கேள்வி: ஆன்–லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறையை விண்ணப்பதாரர்கள் எந்த அளவு பயன்படுத்துகிறார்கள்?
பதில்: நன்றாக வரவேற்பு உள்ளது. ஆனால் ஆன்–லைனில் விண்ணப்பிப்பதால் சான்றிதழின் உண்மை தன்மையை அறிவதற்காக மறுபடியும் பரிசோதிக்க வேண்டியிருப்பதால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. இதற்காக தேவைப்படும் காலஅவகாசம் எடுக்கப்படுகிறது.
திருத்தும் பணியில் கம்ப்யூட்டர்
கேள்வி: வினாத்தாள் லீக் ஆவது, விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு போன்ற முறையற்ற செயல்கள் நடக்காமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
பதில்: வினாத்தாள் லீக் ஆவது, விடைத்தாள் திருத்துவதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க தகுந்த நபர்கள் மூலம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட குரூப்–4 தேர்வில் 244 ஊர்களில் உள்ள 5 ஆயிரம் தேர்வு மையங்களில் 12 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களுக்கான வினாத்தாள் முறையாக அனுப்பி வைக்கப்பட்டதுடன், விடைத்தாளும் முறையாக பெறப்பட்டு திருத்தும் பணி நடந்து வருகிறது. திருத்தும் பணியில் கம்ப்யூட்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், தவறுகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன காலத்துக்கு ஏற்ப
கேள்வி: அரசு பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான பாடதிட்டங்கள் பழைய பாட திட்டங்களாகவே இருக்கிறது, நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
பதில்: பாடத்திட்டங்கள் தற்போது சரியாக தான் உள்ளது, மாற்ற வேண்டிய சூழ்நிலை இல்லை. குறிப்பாக கம்ப்யூட்டர் தொடர்பான பணிகளுக்கு எம்.சி.ஏ. போன்ற படிப்பு படித்த தகுதியானவர்களுக்கு நவீன காலத்திற்கு ஏற்றார் போல் கல்விதகுதி குறிப்பிடப்பட்டு, தேர்வு செய்யப்படுகிறார்கள்.
காத்திருப்போருக்கு முன்னுரிமை
கேள்வி: வேலைவாய்ப்பு துறையில் அதிகம் பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள்? அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா?
பதில்: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் போட்டிதேர்வு முறை என்பதால் இதில் வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.
தேர்வாணையம் நடவடிக்கை
கேள்வி: அரசு பணியில் சேர்ந்தவர்களுடைய வேலைவாய்ப்பு அலுவலக பதிவை ரத்து செய்ய தேர்வாணையம் நடவடிக்கை எடுக்குமா?
பதில்: தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வேலைவாய்ப்பு பதிவை ரத்து செய்து கொள்ள வேண்டுமே, தவிர தேர்வாணையம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை.
குரூப்–8 தேர்வு
கேள்வி: இந்து அறநிலையத்துறையில், நிர்வாக அலுவலர் கிரேடு–4 பணிக்கான குரூப்–8 தேர்வு எப்போது நடக்கிறது?
பதில்: அக்டோபர் 26–ந்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் அன்றைய தேதியில் குரூப்–1 தேர்வுக்கான மெயின் தேர்வு நடக்க இருப்பதால், குரூப்–8 தேர்வை நவம்பர் 16–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முயற்சியும், பயிற்சியும்
கேள்வி: அரசு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உங்களுடைய ஆலோசனை, அறிவுரை என்ன?
பதில்: கடுமையான முயற்சியும், கடுமையான பயிற்சியும் இருந்தால் கண்டிப்பாக தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அரசு பணியில் சேரமுடியும். அந்தஸ்து மிக்க அரசு வேலைகளை செய்வதற்கு தகுதி மட்டும் இருந்தாலே போதும், மாறாக யாருடைய சிபாரிசும் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment