Thursday, September 26, 2013

1–ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம் தேர்தல் கமிஷன்

1–ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம் என்றும், இளைஞர்களை வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கு புதிய திட்டத்தின்படி, தேர்தல் கமிஷன் பிரதிநிதிகளாக ஒவ்வொரு கல்லூரிகளிலும், அரசியல் சாயமற்ற மாணவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
 
இதுகுறித்து தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:–
 
வரைவு பட்டியல் வெளியீடு 
 
வாக்காளர் தகுதி பெறும் நாளாக 1.1.14 அன்றைய தேதியை அடிப்படையாக வைத்து சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்–2014 திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
அதன்படி, 1.10.13 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட இருக்கிறோம். அந்த தேதியில் இருந்து 31.10.13 வரை, அந்த பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பெயர் திருத்தம் ஆகியவற்றுக்கான விண்ணப்ப மனுக்களை அளிக்கலாம்.
 
புதிய விண்ணப்பங்கள் 
 
2.10.13 மற்றும் 5.10.13 ஆகிய தேதிகளில் கிராமசபை, உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் கூட்டங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வாசித்து, அதனடிப்படையில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
 
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 6.10.13, 20.10.13, 27.10.13 ஆகிய தேதிகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களைப் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தொகுதிக்கு வெளியே முகவரி மாறி சென்றிருந்தால், அந்த தொகுதியில் பெயர் சேர்ப்புக்காக புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
 
ஆன்லைனில் சமர்ப்பிக்க மையங்கள் 
 
காகித படிவங்களில் நிரப்பியோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் அதிக அளவில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, தனியார் இணையதள மையங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளனர்.
 
இந்த பணிக்காக அந்த மையங்களைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 44 மையங்களும், தமிழகமெங்கும் சுமார் ஆயிரம் மையங்களும் இந்த பணிக்காக எங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் கேட்டு பல மையங்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மையங்கள் மூலம் விண்ணப்பித்தாலும், அந்த விண்ணப்பத்தை அச்சு நகல் (பிரிண்ட் அவுட்) எடுத்து முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.
 
வீட்டில் இருந்தபடியும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தால் பெயர், புகைப்படத்தில் திருத்தம் வர வாய்ப்பில்லை. என்றாலும், மற்ற விண்ணப்பங்களுக்கான சரிபார்த்தல் போலவே ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான சரிபார்த்தல் பணி நடைபெறும்.
 
அரசியல் முகவர் நியமனம் 
 
வெளியிடப்பட உள்ள வரைவு பட்டியலின் ஒரு நகலும், சி.டி.யும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு கொடுக்கிறோம். அவர்கள் மூலம் அவை, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
 
காலை 11 மணியளவில் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகள் சார்பில் அதன் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அந்தந்த கட்சி சார்பில் ஒரு முகவரை நியமிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளோம்.
 
குற்ற வழக்குப்பதிவு 
 
எங்கள் சார்பில் வாக்குச்சாவடிகளில் ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். இவரிடம் பெயர் சேர்ப்புக்காக, கட்சி முகவர்கள் அதிகபட்சம் 30 (ஒரு மாதத்துக்கு) விண்ணப்பங்களை அளிக்கலாம். நாளொன்றுக்கு அதிகபட்சம் 10 விண்ணப்பங்களை கொடுக்கலாம். அந்த விண்ணப்பங்களுடன், வாக்காளர்களுக்கான தகுதி உறுதிச் சான்றிதழை அந்த முகவர் கொடுக்க வேண்டும்.
 
ஒருவேளை புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, அதில் பலர் புதிதாக குடிவரும் பட்சத்தில், கூடுதல் விண்ணப்பங்களை கட்சி முகவர்கள் கொடுக்கலாம். அவற்றை டி.ஆர்.ஓ. பரிசீலிப்பார். போலி விண்ணப்பங்கள் கொடுப்பது தெரிய வந்தால், அவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
 
புதிய அடையாள அட்டை வழங்கும் நாள் 
 
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்துக்காக வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணி நடந்தது. வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 58 ஆயிரத்து 761–ல் இருந்து 60 ஆயிரத்து 418–ஆக உயர்த்தியுள்ளோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட அனைவருக்கும், தேசிய வாக்காளர் தினமான வரும் ஜனவரி 25–ந் தேதி, அந்தந்த வாக்குச்சாவடிகளில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
 
1.1.14 அன்று 18 வயது நிறைவு பெறும் அனைவருமே வாக்காளராக தகுதி பெற்றுவிட்டனர். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
சிறப்பு திட்டம் 
 
ஜனத்தொகை கணக்கெடுப்பின்படி 18 வயதில் இருந்து 19 வயதுடையோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 3.6 சதவீதமாக உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தில் பதிவாகியுள்ள அந்த வயதுடையவர்களின் எண்ணிக்கை 2.24 சதவீதமாக உள்ளது.
 
அதாவது இந்த வயதைச் சேர்ந்தவர்களில் 40 சதவீதம் பேர் இன்னும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை. எனவே கல்லூரி அளவில் சிறப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளோம்.
 
தேர்தல் ஆணைய பிரதிநிதி 
 
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இருந்து கல்லூரி வளாக தேர்தல் ஆணைய பிரதிநிதி ஒருவரை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். முன்பதாக, இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர் என்பதற்கானச் சான்றை அந்தந்த கல்லூரிகளிடம் இருந்து பெறுவோம்.
 
ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள அந்த பிரதிநிதிகள், தகுதியுள்ள மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுப்பார். அந்த வகையில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்து 59 கல்லூரிகளிகளிடம் இருந்து இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன.
 
எத்தனை வாக்காளர்கள்? 
 
கடந்த கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 5 கோடியே 15 லட்சத்து 69 ஆயிரத்து 62 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் இரண்டு கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 61 பேர் ஆண்கள், இரண்டு கோடியே 57 லட்சத்து 10 ஆயிரத்து 567 பேர் பெண்கள். இதரப் பிரிவில் (அரவாணிகள்) 2,434 பேர் உள்ளனர்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
அனைத்து கட்சி கூட்டம் 
 
முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை தலைமை செயலகத்தில் பிரவீன்குமார் சந்தித்து பேசினார். அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் (துணை சபாநாயகர்) பொள்ளாச்சி ஜெயராமன், வக்கீல் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கிரிநாத், காங்கிரஸ் சார்பில் ரவி, சக்திவடிவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆறுமுகநயினார், ரமணி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வீரபாண்டியன், தே.மு.தி.க. சார்பில் ரவீந்திரன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் நடன சபாபதி, சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் தரப்பு கருத்துகளையும், ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
 

No comments:

Post a Comment