Sunday, September 22, 2013

மாணவர்கள் கண்டிப்பாக கொண்டுவரக்கூடாது வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைக்கவேண்டும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கூடங்களில் வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைத்திடவேண்டும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு செல்போன் தடை
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றிற்கு முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோர் வழியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ–மாணவிகள் பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்துவதால் மாணவர்களின் கவனம் கல்வி கற்பதில் இருந்து திசை திரும்புவதால் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ–மாணவிகள் பள்ளி வாகனங்களுக்குள் செல்போன் கொண்டு வருவது தடை செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது.
பள்ளி வளாகத்தினுள் மாணவ–மாணவிகள் செல்போன் எடுத்து வராமல் இருக்க பெற்றோர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது.
ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக்கூடாது
மேலும் பள்ளிக்கூட வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போன் உபயோகிப்பதால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. எனவே வகுப்பறையில் பாடம் கற்பிக்கும்போது ஆசிரியர்கள் செல்போன்களை அணைத்து வைத்திட வேண்டும்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கும், உதவி தொடக்க கல்வி அதிகாரிகளும் அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து தவறாமல் கடை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment