Tuesday, September 10, 2013

என்.சி.சி., சான்றிதழுக்கு மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு

போலீஸ் பணி மறுக்கப்பட்டவருக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால், வாய்ப்பு கிடைத்துள்ளது.
கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன், தீயணைப்பு ஊழியர் பணி தேடி, பார்த்திபன் என்பவர் விண்ணப்பித்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கான, கட்-ஆப் மதிப்பெண், ஆயுதப்படை போலீசுக்கு, 73; சிறப்பு பிரிவு போலீசுக்கு, 67; சிறை வார்டனுக்கு, 67; தீயணைப்பு துறைக்கு, 67 என, நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 66, மதிப்பெண் பார்த்திபன் பெற்றிருந்தார். அதனால், அவர் தேர்வு செய்யப்படவில்லை.

இதையடுத்து, "என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., சான்றிதழ்களை இணைத்துள்ளேன். அதற்குரிய, ஐந்து மதிப்பெண் வழங்கவில்லை. எனவே, அந்த சான்றிதழுக்கு உரிய மதிப்பெண் வழங்கி, என்னை பரிசீலிக்க வேண்டும்" என மனு அனுப்பினார். அந்த மனு மீது, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், பார்த்திபன், மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.ஆனந்தகுமார் ஆஜரானார்.
நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "விண்ணப்பத்துடன், என்.சி.சி., சான்றிதழை, மனுதாரர் இணைத்துள்ளார். அதை, கோடிங் தாளில், பதிவு செய்துள்ளார். அதன் பின், என்.சி.சி., விவரங்களை சேர்க்கவில்லை. அதனால், என்.சி.சி.,க்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை&' என, கூறப்பட்டுள்ளது.
சீருடைப் பணியாளர் தேர்வாணையம் செய்த தவறால், மனுதாரர், உரிய பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு, என்.சி.சி.,க்காக, ஐந்து மதிப்பெண் வழங்கியிருந்தால், 71 மதிப்பெண் கிடைத்திருக்கும். சிறப்பு போலீஸ், சிறை வார்டன், தீயணைப்புத் துறையில், நியமனம் பெற அவருக்கு தகுதி உள்ளது. எனவே, மனுதாரருக்கு, ஐந்து மதிப்பெண் வழங்கி, அவரை பணியில் நியமிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment