Sunday, September 8, 2013

 அறிவியல் துறையில் நான் சாதித்திட ஊக்கமாக இருந்தது, தமிழ் வழியில் நான் கற்ற ஆரம்பக்கல்வி தான்" என்று கோவை மாவட்டம் பேரூரில் நடந்த தமிழ் பயிற்றுமொழி மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.   
கோவை மாவட்டம் பேரூரில், தமிழ் பயிற்றுமொழி -வழிபாட்டு மொழி மாநில மாநாடு நேற்று துவங்கியது. தொடக்க விழா, பேரூராதீன வளாகம், தொல்காப்பியர் அரங்கில், தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் வரவேற்புடன் துவங்கியது.
பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசுகையில், "60 ஆண்டுக்கு முன் துவக்கப்பட்ட பேரூர் தமிழ்க்கல்லூரி, மணிவிழா ஆண்டை கடந்து நிற்கிறது. சிறப்புக்குரிய செந்தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் பழமையையும் பரப்புவதை நோக்கமாக கொண்டு இக்கல்லூரி செயல்படுகிறது. இந்த மண்ணில் சிறப்புற்று விளங்கும் திருக்கோவில்களில் தமிழ் வழியில் திருக்குட நன்னீராட்டு விழாக்கள் சிறப்பாக நடந்தேறியுள்ளன. தமிழ்மொழி மற்றும் சமயத்தை பரப்புவதில் மடம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தமிழ் மற்றும் தமிழர்களின் எதிர்காலம், இளைய தலைமுறையை நம்பியுள்ளது" என்றார்.
மாநாட்டை துவக்கி வைத்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: நாம் மற்றவருக்கு விளக்காகவும், ஏணியாகவும், படகாகவும் இருக்கவேண்டும். நான் ஆரம்பக்கல்வியை தமிழ் வழியிலேயே கற்றேன். பிற்காலத்தில் அறிவியல் துறையில் நான் சாதித்திட, எனக்கு இது மிகவும் ஊக்கமாக இருந்தது. மொழி என்பது இனத்தின் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சேமிப்புக்கிடங்கு, தகவல் சுரங்கம். காலம், தலைமுறையைக் கடந்து நிற்பது தாய்மொழிதான். ஆரம்ப காலத்தில் அறிவியல் பாடத்தை தமிழில் பயின்றது முக்கிய காரணம்.
கல்வி என்பது வியாபாரமல்ல. மிகப்பெரிய கட்டடத்தில் கல்வி பயின்றால் மட்டுமே, ஒருவர் சாதித்துவிட முடியாது. தரமான கல்வியை, அறப்பணி நோக்கில் போதிக்கும் ஆசிரியர்களால், லட்சிய ஒழுக்கத்துடன் கல்வி பயில்பவர்களே கல்வியில் சாதிக்க முடியும். ஆசிரியர்கள், தாம் செய்யும் பணியை தரத்தோடு செய்ய வேண்டும். அறிவார்ந்த நாடாக வளர, விதை விதைப்பதே சமுதாயத்துக்கு நாம் செய்யும் கடமை. போரில்லாத உலகத்தை உருவாக்க நமது மக்கள் ஒன்றுபட வேண்டும்.
உறக்கத்தில் வருவதல்ல கனவு, உறங்காமல் செய்வதே கனவு. இந்த மாநாட்டில், தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழின் சிறப்பை நிலை நிறுத்தவும், பல்வேறு பரிமாணங்களுக்கு கொண்டு செல்லவும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இளைய தலைமுறையினர் அனைவரும் கல்வியில் சாதித்தால், நிச்சயம் நமது நாடு வல்லரசாக மாறும். இவ்வாறு, அப்துல் கலாம் பேசினார்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கான பரிசுகளை, கலாம் வழங்கினார். நிறைவாக, மாநாட்டு செயலர் அப்பாவு நன்றி கூறினார். தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில், கருத்தரங்குகள் நடந்தன. மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள், இன்று நடக்கின்றன.

No comments:

Post a Comment