Friday, September 13, 2013

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சுவடியியல் பட்டய வகுப்பு துவக்கம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், சுவடியியல் பட்டய வகுப்பு நேற்று துவங்கியது. அதையொட்டி, சுவடிகள் குறித்த, சிறப்புக் கண்காட்சியும், நேற்று துவங்கியது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், இந்த ஆண்டு, தமிழ் சுவடியியல் பட்டய வகுப்பு துவங்கப்பட்டு உள்ளது. இதில், சுவடியியல் துறையில் ஆர்வம் உள்ளோர் கலந்து கொள்வர். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 15ல் நடந்தது. இதில், 50 மாணவர் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வகுப்பில், சுவடிகளின் தோற்றம், வளர்ச்சி, பதிப்பு வரலாறு, செய்யுளியல், யாப்பு, ஆகியவற்றைப் பற்றி அறியவும், ஓலைச் சுவடிகளைப் படிக்கவும், படியெடுக்கவும், பதிப்பிக்கவும் பயிற்சி அளிக்கப்படும்.

பட்டய வகுப்புக்கான துவக்க விழா, சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது. இதில், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர், விஜயராகவன், மகாவித்வான், மயிலம் வே.சுப்பிரமணியன், சுவடியியல் துறை பேராசிரியரும், பட்டய வகுப்பு ஒருங்கிணைப்பாளருமான அ.சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பட்டய வகுப்பு துவக்க விழாவை முன்னிட்டு, சுவடிகள் குறித்த கண்காட்சியும் நேற்று துவங்கியது. இதில், நூற்றுக்கணக்கான சுவடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. வரும், 14ம் தேதி வரை, சுவடி கண்காட்சி நடக்கும்.

No comments:

Post a Comment