Saturday, September 14, 2013

ஐஐடி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை

சென்னை ஐஐடி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்று சிபிஐ விசாரணை நடத்த ஆணை பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், தனி நீதிபதி உத்தரவின்படி பேராசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத் தொகையை ஒரு வாரத்துக்குள் வழங்கவும் உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஐடி பேராசிரியர் வசந்தா கந்தசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடியில் பேராசிரியராக 1995-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். எனக்கு சரியான பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து 1997-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
ஐஐடியில் 1995 முதல் 2000-ஆம் ஆண்டு வரை நடந்த பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. 5 பேர் கொண்ட குழு அமைத்து பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி, அதிகமான நபர்கள் அடங்கிய குழு அமைத்து அவர்களுக்கு விருப்பப்பட்டவர்களை நியமனம் செய்துள்ளனர். எனவே இதில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். அதில், ஐஐடியில் 1995 முதல் 2000-ஆம் ஆண்டு வரை நடந்த பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்று சிபிஐ விசாரிக்க வேண்டும். இதில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு சேர வேண்டிய ஊதிய சலுகைகளை ஐஐடி தர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐஐடி தலைவர், இயக்குநர் மற்றும் பதிவாளர் ஆகியோர் சார்பில் மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் பேராசிரியர்கள் நியமனம், பதவி உயர்வு மற்றும் மறுப்பு ஆகிய அனைத்தும் விதிகளின்படியே நடைபெற்றுள்ளன. இந்த கருத்தை தனி நீதிபதி பதிவு செய்ய தவறிவிட்டார். மேலும், சரியாக நடந்த நியமனங்களுக்கு, ஊகத்தின் அடிப்படையில் விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்படட்து.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில், சிபிஐ விசராணைக்கு ஆணை பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு அவர்கள் தடைவித்தனர். மேலும், தனி நீதிபதியின் உத்தரவுப்படி பேராசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத் தொகையை ஒரு வாரத்துக்குள் வழங்கவும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment