Friday, September 6, 2013

பி.எஸ். அப்துர் ரகுமான் பல்கலை.யில் படிக்க 13 வயது மாணவிக்கு அனுமதி

வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்பில் சேருவதற்கான ஒப்புதல் கடிதத்தை 13 வயது மாணவி சுஷ்மா வர்மாவிடம் வழங்குகிறார் துணைவேந்தர் ஜெ.ஏ.கே.தரீன். உடன் மாணவியின் பெற்றோர் தேஜ்பகதூர் தம்பதி, மாணவர் சேர்க்கை இயக்குநர் வி.என்.ஏ.ஜலால், இணை துணைவேந்தர் பெரியசாமி. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னெüவைச் சேர்ந்த 13 வயதான சிறுமி சுஷ்மாவிற்கு வண்டலூர் பி.எஸ். அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பும், பி.ஹெச்டி ஆய்வுப் படிப்பும் பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐந்தரை வயதில் பள்ளியில் 1-ஆம் வகுப்பில் சேர்க்கப்படாமல், நேரடியாக 9-ஆவது வகுப்பில் சேர்க்கப்பட்டு, 10-ஆவது வயதில் மெட்ரிக்குலேஷன் படிப்பை நிறைவு செய்துள்ள இந்தியாவின் முதல் இளம் அறிவாற்றல் மிக்க மாணவி என்ற பெருமையைப் பெற்றவர் சுஷ்மா. இவருக்கு பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகம் எவ்விதக் கல்விக் கட்டணமும் இல்லாமல் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பி.ஹெச்டி ஆய்வுப்படிப்பு வழங்க முன் வந்துள்ளது.
இது குறித்து பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.ஏ.கே. தரீன் கூறியதாவது:
ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து இந்தியக் கல்வி சமூகம் வியந்து பாராட்டும் வகையில் அறிவாற்றல் மிக்க இளம் மாணவி சுஷ்மா வர்மாவின் அறிவாற்றலைக் கெüரவிக்கும் வகையில் அவருக்கு இங்கு முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பும், பி.ஹெச்டி ஆய்வுப்படிப்பும் எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாக வழங்க உள்ளோம். அவருக்கு தங்குமிடம், உணவு வழங்குவதுடன், மாதாந்திரச் செலவிற்கும் உதவித்தொகை வழங்க உள்ளோம்.
ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் பல்கலைக்கழகத்தில் அவரது தகுதிக்கேற்ற வேலையும் வழங்கி ஆதரவு தர விருப்பம் தெரிவித்துள்ளோம். அவருக்கு மாணவர் சேர்க்கைக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இது குறித்து அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெற்றுள்ள சிறுமி சுஷ்மாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகம் எனக்கு வழங்க முன்வந்துள்ள வாய்ப்புக்கும் உதவிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு சேர்ந்து பயில்வது குறித்து என் பெற்றோருடன் கலந்து விரைவில் தெரிவிக்கிறேன் என்றார்.
சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் வர்மா, பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இயக்குநர் வி.என்.ஏ.ஜலால், இணை துணை முதல்வர் வி.எம்.பெரியசாமி, பதிவாளர் வி.முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment